7-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சத்துணவு பணியாளர்கள் அறிவிப்பு
7-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சத்துணவு பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.;
தஞ்சாவூர்,
தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் தெய்வசிகாமணி, ரெங்கநாதன், அயோத்தி, சீனிவாசன், ஞானஜோதி, ஆதிலட்சுமி, போஸ், ராஜ்குமார், அங்காளஈஸ்வரி, மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழக முதல்-அமைச்சர் அரசு பணியாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த கால தேர்தல் வாக்குறுதிபடி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியமும், முறையான ஓய்வூதியமும் வழங்கப்படும் என்றார்கள். அதனை நிறைவேற்றும்வகையில் காலமுறை ஊதியம் ரூ.6,750 உடன் அகவிலைப்படியும் வழங்க வேண்டும்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அறிவித்தது போல் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் உடனடியாக வழங்கவேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் எங்களது கூட்டமைப்பான தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி(புதன்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
மேலும் வருகிற 30-ந்தேதி சென்னையில் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து முறையிடுவது, இந்த போராட்டங்களில் சத்துணவு பணியாளர்கள் சங்கத்தினர் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.