ஓ.பன்னீர்செல்வம்-11 எம்.எல்.ஏக்களை நீக்க கோரி தி.மு.க. வழக்கு நாளை மறு நாள் விசாரணை

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு 11 எம்.எல்.ஏக்களை நீக்க கோரி தி.மு.க. வழக்கு தொடர்ந்து உள்ளது. நாளை மறு நாள் விசாரணை நடக்கிறது.

Update: 2017-09-25 09:00 GMT
சென்னை

தி.மு.க. கொறடா சக்கர பாணி இன்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசு கொறடா ராஜேந்திரனின் உத்தரவை மீறி எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க் கள் 11 பேரும் செயல்பட்டனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல், பார்த்திபன், ரங்கசாமி ஆகியோர் சபாநாயகரிடம் மனு அளித்தனர். அந்த மனு மீது சபாநாயகர் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை.

எனவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு  அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதன் மீதான விசாரணை நாளை மறுநாள் (27-ந்தேதி) நடைபெறும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டி.டி. வி.தினகரன் இன்று அளித்த பேட்டியில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களை நீக்க கோரி நாங்களும் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று கூறியுள்ளார். இது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்-.ஏ.க்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்