மருத்துவமனையில் நடந்தது என்னவென்று எங்களுக்கு தெரியாது பொன்னையன் பேட்டி

மருத்துவமனையில் நடந்தது என்னவென்று எங்களுக்கு தெரியாது என பொன்னையன் கூறிஉள்ளார்.

Update: 2017-09-25 11:25 GMT
சென்னை, 


தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகியும், இன்னும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.
அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, நாங்கள் யாரும் அவரை பார்க்கவில்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம். அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை கண்டறிய விரைவில் விசாரணையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே ஜெயலலிதா மரணம் பற்றிய நீதி விசாரணை விரைவில் தொடங்கும் என்று அமைச்சர்கள் அறிவித்தனர். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த பொன்னையன் பேசுகையில், மருத்துவமனையில் நடந்தது என்னவென்று எங்களுக்கு தெரியாது. 

சசிகலா குடும்பத்தினர் சொல்ல சொன்னதையே நாங்கள் மக்களிடம் கூறினோம். சசிகலா குடும்பத்தை தவிர அமைச்சர்கள் யாரையுமே ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை. வருத்தம் தெரிவிக்க வேண்டியது சசிகலா குடும்பம் தான், நாங்கள் அல்ல என கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்