ஜெயலலிதா டி.வி. பார்ப்பது போல சசிகலா எடுத்த வீடியோ டி.டி.வி.தினகரன் பரபரப்பு தகவல்

ஜெயலலிதா ‘நைட்டி’ அணிந்து டி.வி. பார்ப்பது போன்ற வீடியோவை சசிகலா எடுத்தார், என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2017-09-26 00:00 GMT
சென்னை, 

சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியின்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு டி.டி.வி.தினகரன் கூறிய பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஜெயலலிதா விவகாரத்தில் பொய் கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறாரே?

பதில்:- அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா இருந்தபோது ‘இட்லி சாப்பிட்டார்’ என்று பொய் சொல்லிவிட்டேன் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார். இவர் சாப்பாட்டு ராமன் போன்று பிரியாணி, இட்லி எல்லாம் வாங்கி சாப்பிடுவார். பதவியை தக்க வைக்கவே திண்டுக்கல் சீனிவாசன் போன்ற அமைச்சர்கள் தங்களின் தரம் தாழ்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்றும், அதற்கு சசிகலாதான் காரணம் என்றும் தி.மு.க. ஒரு பொய் பிரசாரத்தை முன்னெடுத்தது. அவர்களே ஆள் வைத்து சாலையில் உள்ள சசிகலா படங்களை கிழித்தனர். பொதுமக்கள் ஆவேசம் என்று அதற்கு வேறுபெயர் கொடுத்தனர்.

தி.மு.க.வினரின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் என்று சசிகலா கூறியதின்பேரில், அவரின் வேண்டுகோளுக்கிணங்க ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிட்டேன். அந்த சமயத்தில் தி.மு.க.வினரின் சதி செயல்களுக்கு தீனி போடக் கூடாது என்பதால் தான், சசிகலா படத்தை நாங்களே பயன்படுத்தாமல் இருந்தோம். இது சசிகலாவுக்கும் தெரியும்.

ஜெயலலிதா குறித்த சி.சி.டி.வி. பதிவு எங்களிடம் இருப்பதாக கூறுகிறார்கள். அது தவறு. சி.சி.டி.வி. பதிவு அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் தான் இருக்கும். எங்களிடம் வீடியோ பதிவு தான் உள்ளது.

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அவர் எடை குறைந்திருந்தார். ஆஸ்பத்திரியில் தனி வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு, அங்கு அவர் ‘நைட்டி’ அணிந்து கொண்டு டி.வி. பார்த்தார்.

ஜெயலலிதா விருப்பத்தின்பேரில் சசிகலா தான் அந்த வீடியோவை எடுத்தார். ஜெயலலிதாவை இதுவரை யாருமே ‘நைட்டி’யில் பார்த்தது இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு கண்ணியத்தை கடைபிடித்தவர், ஜெயலலிதா. எனவே அந்த வீடியோவை வெளியிடுவது நன்றாக இருக்காது என்று தான் வெளியிடவில்லை.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை, சி.பி.ஐ. விசாரணை, ஏன் சர்வதேச விசாரணை கூட நடத்தட்டும். உரிய நேரத்தில் அந்த வீடியோ பதிவை தாக்கல் செய்வோம்.

கேள்வி:- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது தேர்தல் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது குறித்து மு.க.ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியுள்ளாரே?

பதில்:- சி.பி.ஐ. வைத்து விசாரணை நடத்தட்டுமே... அந்த கைரேகையை தேர்தல் ஆணையமும் ஏற்றதே? அப்படியானால் தேர்தல் ஆணையத்தை தான் கேள்வி கேட்கவேண்டும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சமயத்தில் ஒருமுறை தான் ஜெயலலிதாவை பார்த்தேன். இவ்வளவு ஏன், தொற்று பயம் காரணமாக ஜெயலலிதாவை சந்திக்க சசிகலாவுக்கே அனுமதி மறுக்கப்பட்டது. ஜெயலலிதா தூங்கும்போது தான் சசிகலா அவரை சென்று பார்ப்பார். இதுதான் முதல் 20 நாட்கள் வரை நடந்தது. தனி வார்டுக்கு மாற்றப்பட்ட பின் னர் தான் ஜெயலலிதாவுடன், சசிகலா இருந்தார். அப்போது தான் வீடியோவும் எடுத்தார்.

கேள்வி:- முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள்-நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறதே?

பதில்:- எங்கள் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. தங்கள் மீதும் தேவையற்ற நடவடிக்கைகள் பாயுமோ, என்ற பயத்தில் தான் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அங்கே உள்ளனர்.

கேள்வி:- கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து?

பதில்:- ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியலில் குதிக்கும் உரிமை உண்டு. கட்சி தொடங்கும் எவரும், முதல்- அமைச்சர் கனவு காணுவதில் தவறு கிடையாதே... இதனை நீங்கள் தான் (ஊடகங்கள்) பரபரப்பாக்கி வருகிறீர்கள்.

மேற்கண்டவாறு டி.டி.வி. தினகரன் பதில் அளித்தார். 

மேலும் செய்திகள்