அண்ணா மேம்பாலத்தில் மொபட்டில் வந்த பெண் அதிகாரியை தாக்கி நகை கொள்ளை

சென்னை அண்ணா மேம்பாலத்தில், மொபட்டில் வந்த பெண் அதிகாரியை தாக்கி கீழே தள்ளி நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

Update: 2017-10-11 22:15 GMT

சென்னை,

சென்னை கோபாலபுரம், கணபதி காலனி, 2–வது தெருவை சேர்ந்தவர் லதா (வயது44). இவர் தனியார் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணியாற்றுகிறார். இவரது கணவர் முருகன் ரெயில்வே அதிகாரி. இவரது தங்கை சென்னையில் பெண் போலீசாக பணியாற்றுகிறார்.

லதா தினமும் தனது மகளை மேற்கு மாம்பலத்தில் டியூசனுக்கு அனுப்புவார். நேற்று முன்தினம் இரவு டியூசனுக்கு அனுப்பிய மகளை ஏற்றிக்கொண்டு லதா மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அண்ணா மேம்பாலத்தில் வரும்போது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள் லதாவை தாக்கி கீழே தள்ளினார்கள். அவர் அணிந்திருந்த 12½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் அந்த நபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

கொள்ளையர்கள் தாக்கி கீழே விழுந்ததில் லதா காயம் அடைந்தார். ஆனால் அவரது மகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக லதா, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கமாக இதுபோன்ற புகார் மனுக்களில் போலீசார் சாதாரண சட்டப்பிரிவுகளின் கீழ் தான் வழக்குப்பதிவு செய்வார்கள்.

சமீபத்தில் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் லதா கொடுத்த புகார் மனு மீது தேனாம்பேட்டை போலீசார் கொள்ளை வழக்கு பதிவு செய்தனர்.

குற்றவாளிகளை கைது செய்து உடனடியாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்