‘நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபடாதீர்கள்’ ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்

“ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபடாதீர்கள்” என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2017-10-18 20:46 GMT
சென்னை,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்தாக கருதப்படும் சூழலில், இதனை குடிப்பதால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும், நிலவேம்பு குடிநீர் குடிப்பதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், நிலவேம்பு குடிநீர் பற்றி வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்த சூழலில், நேற்று சமூக வலைதளத்தில் நடிகர் கமல்ஹாசன், நிலவேம்பு குடிநீர் பற்றி கருத்து பதிவு செய்தார். அதில், “சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்” என்று கூறியுள்ளார்.

அதோடு, “ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்ய வேண்டுமென்றில்லை பாரம்பரியக் காவலர்களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “மக்கள் டெங்கு நோயால் அவதியுறும் வேளையில், அரசின் முயற்சிகளுக்கு ஊறுசெய்யும் வகையில் வதந்தி பரப்ப சில சினிமா பிரபலங்கள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. நிலவேம்பு குடிநீர் பக்கவிளைவே இல்லாத மருந்து” என்றார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு மன்னிப்பு கோரினார், கமல்ஹாசன்

நாட்டில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை விதித்து பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில், அவர் தமிழ் வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில், “அவசரப்பட்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் மோடி பிடிவாதம் பிடிக்காமல், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டால், அவருக்கு ‘சல்யூட்’ அடிக்க தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்