மாநகராட்சி கடை வாடகை உயர்வு: லதா ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

கடை வாடகையை சென்னை மாநகராட்சி உயர்த்தியதை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-11-20 21:30 GMT
சென்னை, 

சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில், கடந்த 25 ஆண்டுளாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா பிரைவேட் லிமிட்டெட்’ என்ற பெயரில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த கடைக்கு வாடகையாக மாதம் ரூ.3 ஆயிரத்து 702-ஐ லதா ரஜினிகாந்த் செலுத்தி வந்தார். இந்த நிலையில், திடீரென முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், வாடகை தொகையை ரூ.21 ஆயிரத்து 160 ஆக உயர்த்தி சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

தொழில் நலிவடைவு

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘இந்த கட்டிடத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை. பராமரிப்புக்காக நாங்கள் பெரும் தொகையை செலவு செய்து வந்துள்ளோம். ரூ.1,000, ரூ.500 பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. சட்டம், ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றினால், எங்களது தொழில் நலிவடைந்து உள்ளது. குறைந்த லாபத்தில் தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில், திடீரென மாநகராட்சி நிர்வாகம் பெரும் தொகையை வாடகையாக நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக முறையான ஆய்வுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. எனவே, வாடகையை உயர்த்தி மாநகராட்சி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

தள்ளுபடி

இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் டி.சி.கோபாலகிருஷ்ணன், ‘மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளின் வாடகை 9 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு உத்தரவுப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படிதான் மனுதாரரின் கடைக்கும் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்