ஆர்.கே.நகர் தொகுதியில் கம்யூனிஸ்டு கட்சிகளும் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் திருநாவுக்கரசர் கோரிக்கை

ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க.வை கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

Update: 2017-11-25 19:36 GMT
நெல்லை,

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது. மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வார்கள். இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார். அவரது வெற்றி உறுதி ஆகும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு மு.க.ஸ்டாலின் பிற கட்சிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் கட்சிகள், மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த தேர்தலில் தனித்தனியாக போட்டியிடக்கூடாது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. 3 அணிகளாக போட்டியிடுகிறது. அதாவது அ.தி.மு.க. மற்றும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மற்றும் டி.டி.வி. தினகரன், தீபா அணி ஆகிய 3 அணிகளாக போட்டியிடுகின்றனர். ஜெயலலிதா இருந்தபோது ஆர்.கே.நகரில் பெற்ற ஓட்டுகளுக்கும், தற்போதைய தேர்தலில் எவ்வளவு ஓட்டுகள் குறைத்து கிடைக்கும் என்பதையும் தேர்தலின்போது பார்த்து விடலாம்.

பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பிரபலமானவரை வேட்பாளராக நிறுத்துவோம் என்று கூறிஉள்ளார். கடந்த தேர்தலில் கங்கை அமரனை நிறுத்தினார்கள், அவரும் பிரபலமானவர்தான். இந்த தேர்தலிலும் அவரையே நிறுத்துகிறார்களா? அல்லது அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கிறார்களா? என்று தெரியவில்லை. அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்