மாயமான மீனவர்களை ஆஜர்படுத்தக்கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்டு ஆஜர்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-12-19 20:45 GMT
மதுரை, 

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலை சேர்ந்த ஆண்டோ லெனின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 29-ந்தேதி இரவிலும், மறுநாள் பகலிலும் வந்த ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரழிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் 200 படகுகளில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

இவர்களை ஹெலிகாப்டரை அனுப்பி மீட்கும் பணியில் மத்திய-மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 31-ந்தேதியே கடல் பகுதிக்கு ஹெலிகாப்டரை அனுப்பி மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தால் ஏராளமான மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பார்கள்.

மீனவ கிராமங்களில் டிசம்பர் 3 முதல் 17-ந்தேதி வரை ஆய்வு நடத்தியபோது 551 மீனவர்கள் இதுவரை வீடு திரும்பாதது தெரியவந்தது. மாயமான மீனவர்களின் நிலை தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதனால் ஒகி புயலில் சிக்கி மாயமான 551 மீனவர்களையும் கண்டுபிடித்து ஆஜர்படுத்த மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, ஜெகதீஷ்சந்திரா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் வருகிற 22-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும் செய்திகள்