தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எடப்பாடி பழனிசாமி பேட்டி

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNCM #EdappadiPalaniswami

Update: 2018-01-15 22:30 GMT
ஓமலூர், 

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற தொகுதி வாரியாக எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலருடன் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:-

தினகரன் குறித்து பேச விரும்பவில்லை

காவிரி டெல்டா மாவட்டத்தில் தற்போது மழை பெய்து உள்ளது. கர்நாடகம், தமிழகத்துக்கு 80 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டியது உள்ளது. இதில் 7 டி.எம்.சி. தண்ணீரை கொடுத்தால்கூட டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடைக்கு போதுமானதாக இருக்கும். எனவே, அந்த தண்ணீரை கர்நாடகம் உடனே வழங்க வேண்டும். கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மரபுகளை கடைபிடித்தனர். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது முடிவு செய்யப்படுவார்கள். டி.டி.வி.தினகரன் தரப்பினர் கர்நாடக மாநில தேர்தலில் போட்டியிடுவதுபற்றி தெரிவித்து உள்ளது குறித்து நான் எதுவும் கூறமுடியாது.

கமல் கட்சி தொடங்கலாம்...

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு பெருந்தலைவர்கள் வகுத்த கொள்கைகளில் இந்த அரசு பயணிக்கிறது. அ.தி.மு.க. மதசார்பற்ற கட்சி. முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. தான் மத்திய அரசிடம் முதலில் வலியுறுத்தியது. இந்த அரசை கவிழ்க்க வேண்டும் என சிலர் செயல்படுகின்றனர். அது கனவிலும் நடக்காது. சேலம் விமான நிலையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் கமல் கட்சி தொடங்க உள்ளதாக கூறி உள்ளாரே என நிருபர்கள் அவரிடம் கேட்டபோது, ‘ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் ஒரு சில இயக்கங்கள் மட்டுமே நிலைத்து நிற்கின்றன. அதில் அ.தி.மு.க.வும் ஒன்று’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்