கூகுள் தேடுபொறியில் இனி தமிழிலும் விளம்பரம் செய்யலாம்

இணையத்தில் முன்னணி தேடுபொறியாக விளங்கும் கூகுள் நிறுவனம், பல்வேறு விளம்பரங்களையும் தனது தளத்தில் வெளியிடுகிறது.

Update: 2018-02-21 21:15 GMT
சென்னை,

இணையத்தில் முன்னணி தேடுபொறியாக விளங்கும் கூகுள் நிறுவனம், பல்வேறு விளம்பரங்களையும் தனது தளத்தில் வெளியிடுகிறது. இதற்காக ‘கூகுள் ஆட்சென்ஸ்’, ‘கூகுள் ஆட்வேர்ட்ஸ்’ போன்ற சேவை நிறுவனங்களை கூகுள் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

இதில் விளம்பரங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் சில பிராந்திய மொழிகளில் மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை இந்தி, பெங்காலி மொழிகளில் மட்டுமே இதுவரை விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

இனிமேல் தமிழிலும் விளம்பரங்களை வெளியிடும் வாய்ப்பை கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளது. உலக தாய்மொழி தினத்தையொட்டி இந்த வசதியை கூகுள் நிறுவனம் அறிவித்து உள்ளது. இதன் மூலம் விளம்பரதாரர்கள் தமிழிலேயே விளம்பரத்தை வெளியிடவும், வாடிக்கையாளர்கள் தமிழிலேயே அவற்றை தேடிப்பெறவும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து கூகுள் மார்க்கெட்டிங் சொல்யூ‌ஷன்சின் இயக்குனர் ஷாலினி கிரிஸ் கூறுகையில், ‘பெரும்பாலான இந்திய இணையதள பயன்பாட்டாளர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் அல்ல. எனவே ஒவ்வொருவருக்கும் இணையத்தை அதிக பயனுள்ளதாக்கும் வகையில், இந்திய மொழிகளில் இணையத்தை பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளோம்’ என்றார்.

இதைப்போல தமிழ் உள்பட 15 இந்திய மொழிகளில் இ–மெயில் முகவரிகளை உருவாக்கிக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனமும் வசதி ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ‘ஆபீஸ் 365’, ‘அவுட்லுக் 2016’, ‘அவுட்லுக்.காம்’ உள்ளிட்டவற்றில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இ–மெயில் முகவரிகளை உருவாக்க முடியும்.

மேலும் செய்திகள்