“தலை நிமிர்ந்த தமிழகத்தை அமைக்க சபதம் ஏற்போம்” டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அறிக்கை

ஜெயலலிதா பிறந்தநாளில் தலை நிமிர்ந்த தமிழகத்தை அமைக்க சபதம் ஏற்போம் என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.#TTVDinakaran

Update: 2018-02-24 23:00 GMT
சென்னை,

ஜெயலலிதா பிறந்தநாளில் தலை நிமிர்ந்த தமிழகத்தை அமைக்க சபதம் ஏற்போம் என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தனித்தன்மையை தன் குணமாகக்கொண்டு பள்ளிக்காலம், பின்னர் கலைத்துறையிலும், அரசியல் உலகிலும், ஆட்சிமுறையிலும் என அனைத்திலும் முதன்மையை பெற்று, தமிழகத்தையும் முன்மாதிரி மாநிலமாக நிலைநாட்டி, உலக அரங்கையே திரும்பி பார்க்கவைத்த ஒரு மாபெரும் சகாப்தம் ஜெயலலிதா.

தந்தை பெரியாரின் கொள்கை மாறா போர்குணமும், பேரறிஞர் அண்ணாவின் அறிவுச் செல்வமும், எம்.ஜி.ஆரின் வள்ளல் குணமும், ஒருசேர உருவெடுத்து வந்ததைப்போல், மக்கள் வாழ்வில் வளர்ச்சி காண முடிவெடுத்து ‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என உழைத்திட்ட, ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை நாம் கொண்டாடுகிறோம்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் என்றாலே மற்றவர்களுக்கு மரியாதையும், மதிப்பும் ஏற்பட்டது. ஆனால் இன்றோ துரோகம் புரிவதை மட்டுமே மூலதனமாக கொண்ட கொடிய கூட்டம், தமிழகத்தின் பெருமையையும், கட்சியின் சிறப்பையும் தங்கள் சுயநலனுக்காகவும், பதவி ஆசைக்காகவும், டெல்லியிடம் அடிமைசாசனமாக எழுதிக்கொடுத்து விட்டது.

துரோகத்துக்கு ஒருபோதும் தமிழகம் துணைபோகாது, அதை அனுமதிக்கவும் செய்யாது. தமிழக மக்களும், இயக்கத்தொண்டர்களும் யார் பக்கம் இருக்கிறார்கள்? என்பதற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் புகழ் மற்றும் அவரது மக்கள் நல கொள்கைகளை காத்திடுவோம். அதுவே ஜெயலலிதா பிறந்தநாளில் நாம் மேற்கொள்ளும் உறுதிமொழி. அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் அவர் நிறுவிக்காட்டிய உண்மையான மக்கள் அரசை, யாருக்கும் மண்டியிடாத அரசை, வளமான தமிழர் வாழ்வை, தலைநிமிர்ந்த தமிழகத்தை அமைத்துக்காட்ட சபதம் ஏற்றிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்