காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்: பிரதமரை சந்திக்க தமிழக குழு அடுத்த வாரம் டெல்லி பயணம்

பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக தமிழக அனைத்து கட்சி தலைவர்கள் குழு அடுத்த வாரம் டெல்லி செல்கிறது. #Cauvery #PMModi

Update: 2018-02-24 22:45 GMT
சென்னை,

பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக தமிழக அனைத்து கட்சி தலைவர்கள் குழு அடுத்த வாரம் டெல்லி செல்கிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 16-ந் தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில் தமிழகத்துக்கான காவிரி நீர் ஒதுக்கீடு அளவு 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டது. இது தமிழகத்துக்கு பாதகமாக அமைந்துவிட்டது. இந்த தீர்ப்பால் தமிழகத்தில் 2 லட்சம் ஏக்கர் பாசன பரப்பு பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

காவிரி நீர் திறப்பை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பையொட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஒரு குழுவாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து கட்சி தலைவர்கள் டெல்லி செல்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார். பிரதமரை சந்தித்த பின்னர் டெல்லியில் மத்திய சட்டத்துறை மற்றும் நீர்பாசனத்துறை மந்திரிகளையும் குழுவினர் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துடன் தமிழக அதிகாரிகள் தொடர்புகொண்டு, தமிழகத்தில் இருந்து டெல்லி வரவிருக்கும் அனைத்து கட்சி குழுவுக்கு பிரதமரை சந்திக்க தேதி மற்றும் நேரம் ஒதுக்கித்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். அடுத்த வாரம் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கித்தருவதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு டெல்லி பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமாக இறங்கியுள்ளது.

மேலும் செய்திகள்