காவிரி பற்றிய தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூட உள்ளது என தகவல்

காவிரி பற்றிய தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூட உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. #CauveryManagementBoard

Update: 2018-03-13 06:57 GMT
சென்னை,

காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கான தண்ணீரின் அளவை குறைத்து கடந்த மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

அத்துடன், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. இதற்காக டெல்லியில் நடந்த 4 மாநில உயரதிகாரிகளுடனான மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வாரியம் அமைக்க வலியுறுத்தினர்.  நாடாளுமன்றத்திலும் அ.தி.மு.க.வின் எம்.பி.க்கள் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், காவிரி பற்றிய தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூட உள்ளது.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்த சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக, வருகிற மார்ச் 15ந்தேதி பட்ஜெட் தாக்கலான பிறகு மாலையில் சிறப்பு சட்டமன்றம் கூடும் தேதி முடிவாகும்.

மேலும் செய்திகள்