ரஜினிகாந்த் கட்சிக்கு கொடி தயார்

ரஜினிகாந்த் கட்சியின் கொடி தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், கட்சியின் பெயர் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வருகிற தமிழ் புத்தாண்டு அன்று ரஜினிகாந்த் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Update: 2018-03-18 23:45 GMT
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு(2017) டிசம்பர் மாதம் 31-ந்தேதி தான் அரசியலுக்கு வருவதாக கூறி அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். மேலும், ரஜினி நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்போது தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக அரசியலுக்கான ஆயத்த பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளுக்கு எப்படி மாவட்ட வாரியாக நிர்வாகிகள் இருக்கிறார்களோ? அதேபோல், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை 3 கட்டங்களாக மாவட்ட ரீதியாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 4-வது கட்டமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்புக்கு பிறகு, இமயமலை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் அங்கு 15 நாட்களுக்கு மேல் தங்குகிறார்.

அரசியல் அறிவிப்புக்கு இடையில் அவர் இமயமலை பயணம் மேற்கொண்டு இருப்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், ரஜினிகாந்த் அதை பொருட்படுத்தவில்லை. அவருடைய அரசியல் அடித்தளத்துக்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பணியை துரிதப்படுத்தி இருக்கிறார். அதன் ஒரு பகுதி தான் நிர்வாகிகள் நியமனம் ஆகும்.

இமயமலையில் இருந்து திரும்பியதும் ரஜினிகாந்த், அரசியல் பணிகளில் வேகம் காட்ட இருக்கிறார். அதன் முதல் அடித்தளம் தான் கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுகம் செய்வது. அந்தவகையில், ஏற்கனவே ரஜினிகாந்தின் கட்சிக்கு கொடி தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், கட்சியின் பெயருக்காக 10 பெயர்கள் தேர்வுக்கான பட்டியலில் இருப்பதாகவும், மக்களை கவரும் விதமாகவும், அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை தரும் வகையிலும் பெயர் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. கட்சி கொடி மற்றும் பெயரை நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந்தேதி அறிமுகம் செய்ய அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக பிரமாண்ட மாநாடு நடத்தவும், மாநாட்டுக்கான இடத்தை திருச்சியிலோ அல்லது சென்னையிலோ தேர்வு செய்ய இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் செய்திகள்