‘தீக்குளிக்க முயன்றதற்கு மன உளைச்சலே காரணம்’ 2 போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் பரபரப்பு தகவல்

தீக்குளிக்க முயன்றதற்கு மனஉளைச்சலே காரணம் என்று 2 போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-03-21 23:58 GMT
சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் முன்பு தேனி மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர்களான கணேஷ், ரகு ஆகிய 2 பேரும் நேற்று மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இவர் கள் 2 பேரும், கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணியில் சேர்ந்தவர்கள்.

தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரர்களின் குடும்ப பின்னணி குறித்த விவரங்கள் வருமாறு:-

போலீஸ்காரர் கணேஷ், கம்பம் கோம்பை சாலையை சேர்ந்தவர். அங்குள்ள தீயணைப்பு நிலையம் அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய அப்பா பெயர் ஜெயராஜ். அம்மா பெயர் மீனா. ஜெயராஜ் விவசாயம் செய்து வருகிறார்.

கணேசுக்கு ஒரு அண்ணனும், ஒரு அக்காளும் உள்ளனர். அவர்கள் இருவரும் பிளஸ்-2 வரை படித்துள்ளனர். வீட்டில் முதல் பட்டதாரியான கணேஷ், பி.ஏ. படித்துள்ளார். பின்னர், தொலைதூரக் கல்வி மூலம் எம்.ஏ. படித்து வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை ஜெயராஜ் கூறுகையில், ‘எனது இளைய மகன் கணேஷ் போலீஸ் வேலைக்கு விரும்பித் தான் சென்றான். கஷ்டப்பட்டு அவனை படிக்க வைத்தேன். ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டதால் மன வேதனையில் இருந்தான். எல்லா வேலையிலும் பிரச்சினை இருக்கும், நீ சமாளித்து வேலை பார் என்று அறிவுரை கூறி வந்தேன். அவனுடைய அண்ணன், அக்காளுக்கு திருமணம் ஆகி விட்டது. கணேசுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்தோம்’ என்றார்.

மற்றொரு போலீஸ்காரரான ரகு, சின்னமனூர் அருகே உள்ள எழுவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை பெயர் ஆறுமுகம். தாயார் பெயர் புஷ்பம். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவருக்கு ஈஸ்வரன் என்ற தம்பியும், சந்தியா என்ற தங்கையும் உள்ளனர். ரகுதான், வீட்டில் மூத்த மகன். பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோகிலாபுரத்தை சேர்ந்த கார்த்திக்ஜோதி என்பவருடன் திருமணம் ஆனது. 3 வயதில் ரட்ஷிகா என்ற மகள் இருக்கிறாள்.

இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி கார்த்திக்ஜோதி கூறுகையில், ‘பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் வீட்டில் புலம்பிக் கொண்டு இருந்தார். சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்டார். ரொம்ப கஷ்டமாக இருந்தால் வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும், விவசாயம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறி வந்தோம். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இப்படி ஒரு எண்ணத்தில் சென்று இருப்பார் என்று தெரியாது’ என்றார். 

மேலும் செய்திகள்