நடிகர் தனுசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என கூறி மதுரை ஐகோர்ட்டில் கதிரேசன் தம்பதியினர் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #ActorDhanush

Update: 2018-03-23 07:36 GMT
மதுரை,

மேலூரைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் கடந்த 2016-ஆம் ஆண்டு மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், நடிகர் தனுஷ்,  எங்களது மகன். பிளஸ் 1 படிக்கும் போது விடுதியில் இருந்து சென்னை சென்று விட்டான். அதன் பிறகு எங்கள் வீட்டிற்கு வரவில்லை. தற்போது நடிகராகிவிட்டார். எனவே எங்களுக்கு ஜீவனாம்சம் தொகை மாதந்தோறும் வழங்க உத்திரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.இந்த வழக்கு அடிப்படை ஆதாரமற்றது, இதை ரத்து செய்ய வேண்டும் என தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனை விசாரித்த நீதிபதி, கதிரேசன் தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த விசாரணையின் போது தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியானவை. அவை போலியாக தயாரிக்கப்பட்டது. எனவே இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கதிரேசன் தம்பதியினர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட உகந்ததா? இல்லையா? என்பது குறித்த விசாரணை நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், வழக்கு விசாரணையின் போது, தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. எனவே, இந்த சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறினார். 

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி கதிரேசன் தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

மேலும் செய்திகள்