தமிழக உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவி சிறையில் அடைப்பதா?

தமிழக உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவி சிறையில் அடைப்பதாக கூறி, வைகோ தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2018-05-04 21:30 GMT
சென்னை,

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக ம.தி.மு.க. சார்பில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று மாலை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.

உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் தாமோதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுசெயலாளர் வன்னியரசு, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெஹ்லான் பாகவி உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு.

தமிழக போலீசார் அரசியல் சட்டம் அனுமதித்துள்ள அடிப்படை உரிமைகளை நசுக்கி, எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதும், தமிழக உரிமைகளுக்காக போராடுவோர் மீது குண்டர் சட்டத்தை ஏவி சிறைப்படுத்துவதும், எதிர்க்கட்சியினர் ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுத்து ஆளும் கட்சியின் ஏவல் படையாக செயல்படுவதும் மக்களாட்சிக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.

தமிழக போலீசாரின் அடக்குமுறைக்கு வலுவான கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம். மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.

நியூட்ரினோ, மீத்தேன் உள்ளிட்ட பல்வேறு நாசக்கார திட்டங்களால் தமிழகத்தை பொட்டல் காடு ஆக்கும் முயற்சிக்கு எதிராக போராடுபவர்கள் மீது ஹிட்லர், முசோலினி கொள்கையை மத்திய-மாநில அரசுகள் பின்பற்றுகிறது. இதனை எதிர்த்து அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

நீட் தேர்வுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்