எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் சேர மே 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் சேர மே 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Update: 2024-04-30 12:26 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016-2017-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை எனும் நான்கு ஆண்டு கால பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2024-2025-ம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவிகள் விண்ணப்பங்களை 02.05.2024 முதல் 20.05.2025 வரை www.tn.gov.in எனும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வர் (மு.கூ.பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை 600113 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் மட்டுமே 27.05.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 27.05.2024 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும், மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்