விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளை தள்ளுபடி செய்யக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு

அதிகார வரம்பு இல்லை என்று கூறி விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளை தள்ளுபடி செய்யக்கூடாது என்று கீழ்கோர்ட்டுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-05-05 21:30 GMT
சென்னை,

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் துரைசாமி, கடந்த 2012-ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு கோரி மனைவி தனலட்சுமி மற்றும் குடும்பத்தினர் நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் இன்சூரன்ஸ் நிறுவனம் எதிர்தரப்பாக சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இன்சூரன்ஸ் நிறுவனம் மயிலாடுதுறையில் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த வழக்கை விசாரிக்க நாமக்கல் கோர்ட்டுக்கு அதிகார வரம்பு இல்லை’ என்று கூறி தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து தனலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அதிகார வரம்பு இல்லை என்று கூறி விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளை கீழ்கோர்ட்டுகள் தள்ளுபடி செய்யக்கூடாது. விபத்து இழப்பீடு கோரிய மனுதாரர்களின் மனுவை நாமக்கல் கோர்ட்டு தள்ளுபடி செய்தது விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியை விட அதிர்ச்சிகரமானது. அதிகார வரம்பு இல்லை என்று கூறி மனுதாரர்களின் மனுவை தள்ளுபடி செய்து நாமக்கல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக 4 வாரத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்