அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.

Update: 2018-05-14 21:00 GMT
சென்னை,

தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. தமிழகத்தில் கோடைமழை தொடரும் என வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை சில மாவட்டங்களில் வழக்கமான அளவை விட கூடுதலாக பெய்தது. பொதுவாக கோடை மழையை பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்ப்பது வழக்கம்.

தமிழகத்தில் கோடைமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்தநிலையில் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–

தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. அது வலுப்பெற்று அடுத்த 48 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறப்போகிறது. அது மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் யாரும் தென்மேற்கு அரபிக்கடலில் மீன்பிடிக்க செல்லவேண்டாம்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்திற்கு எந்தவித தாக்கமும் இருக்காது. கோடை மழை தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பெய்யும். தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களில் உள் பகுதிகளிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு. இது முழுக்க முழுக்க கோடை மழை.

இவ்வாறு வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–

பழனி 4 செ.மீ., குழித்துறை, உடுமலைப்பேட்டை தலா 3 செ.மீ., தோகைமலை, வால்பாறை, திருமங்கலம், கொடைக்கானல் தலா 2 செ.மீ., பொள்ளாச்சி, திருச்சி, நாகர்கோவில், ஓசூர், தென்காசி, அருப்புக்கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர், சேரன்மகாதேவி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்