‘தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பலம் பொருந்திய இயக்கமாக மாறும்’ அகில இந்திய இணை பொதுச்செயலாளர் பேட்டி

‘தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பலம் பொருந்திய இயக்கமாக மாறும்’ என்று அந்த இயக்கத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்யா கூறினார்.

Update: 2018-05-18 22:29 GMT
சென்னை,

சென்னை, அம்பத்தூரில் உள்ள ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கான மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பை அகில ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்யா பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் எத்தனை பேர் கலந்து கொள்கின்றனர்? இவர்களுக்கு எந்தமாதிரியான பயிற்சி அளிக்கப்படுகிறது?

பதில்:- சென்னையில் நடைபெறும் 20 நாள் பயிற்சி முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த 40 வயதுக்கு மேற்பட்ட 310 பேர் கலந்து கொண்டு உள்ளனர். இவர்களுக்கு இந்திய வரலாறு, நம்முடைய கலாசாரம், பண்பாடுகள், பாரம்பரிய இந்து தர்மம், சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் தியாகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதவிர பழனி, கள்ளக்குறிச்சி, திருப்பூரில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- இதுபோன்ற முகாம்கள் நடத்தி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கால் ஊன்ற பார்க்கிறதா?

பதில்:- தமிழ்நாட்டில் திராவிடத்தின் நிலையால் இருந்த தடங்கல்களை பெரிய அளவில் நாங்கள் பொருட்படுத்தவில்லை. பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது. அவருடைய கொள்கையான ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி சமத்துவத்தை கடைப்பிடிப்பது, ஜாதி, மதம் கிடையாது போன்றவற்றை நாங்களும் கடைப்பிடிக்கிறோம். எங்களுக்குள் வேறுபாடு கிடையாது. பிற மாநிலங்களை போல தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரிய ஆதரவு கிடைக்கும் என்பதுடன், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பலம் பொருந்திய இயக்கமாக மாறும் என்றும் நம்புகிறோம்.

கேள்வி: தமிழகத்தில் எவ்வளவு கிளைகளுடன் ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது?

பதில்:- தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற முடியாது என்று பலர் பேசுகிறார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ். கால் மட்டுமல்ல, ஆழமாக வேரூன்றி வெகு காலமாகிவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் தாலுகா அளவில் 1,788 கிளைகளை தொடங்கி சமுதாயப்பணி ஆற்றி வருகிறது. நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகள் உள்ளன.

கேள்வி:- இளைஞர்கள் எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் உள்ளனர்?

பதில்:- ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் நடத்தப்படும் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தமிழக ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் நரசிம்மன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்