விவசாயிகளுக்கு ரூ.3,265 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது

2016-2017-ம் ஆண்டில், வறட்சியால் பயிர் பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கு இதுவரை ரூ.3,265 கோடியே 39 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது.

Update: 2018-05-18 22:44 GMT
சென்னை,

பயிர் இழப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் 2016 முதல், சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2016-17-ம் ஆண்டு பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும் காலத்தே நிறைவேற்ற தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளால் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை விரைந்து கணிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24.4.2017 அன்று தொடங்கி வைத்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

2016-17ம் ஆண்டில் மத்திய அரசால் சம்பா நெற்பயிரை பதிவு செய்வதற்கு நீட்டிக்கப்பட்ட காலத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையையும், காரீப் 2016 மற்றும் ரபி 2016-17-ம் ஆண்டில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்க காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்தும்படி பிரதமருக்கு, முதல்-அமைச்சர் கடிதம் எழுதினார்.

அதைத் தொடர்ந்து இந்திய வேளாண் காப்பீட்டுக்கழகம் நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு ரூ.103.15 கோடி வழங்கியுள்ளது. மேலும், நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கும்படி மத்திய அரசின் அறிவுரைக்கிணங்க மற்ற காப்பீட்டு நிறுவனங்களான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பொது காப்பீட்டுக் கழகம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு பொதுக் காப்பீட்டுக் கழகம் ஆகிய நிறுவனங்கள் தற்போது இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில், 2016-2017-ம் ஆண்டில், வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை ரூ.3,265 கோடியே 39 லட்சம் இழப்பீட்டுத் தொகை பயிர் காப்பீட்டு நிறுவனங்களால் ஒப்பளிக்கப்பட்டு 10 லட்சத்து 62 ஆயிரத்து 495 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட இதர தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் மிக அதிகபட்சமான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தந்து இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.

முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, காப்பீட்டு நிறுவனங்களால் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவேண்டிய ரூ.453 கோடி இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக ஒப்புதல் வழங்குவதற்கு காப்பீட்டு நிறுவனங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும், விவசாயிகளின் அரணாக இந்த அரசு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்