காற்றாலையில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 2 என்ஜினீயர்கள் உடல் கருகிச்சாவு

நெல்லை அருகே காற்றாலையில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் 2 என்ஜினீயர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

Update: 2018-05-21 21:45 GMT
நெல்லை, 

நெல்லை அருகே உள்ள ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் பகுதியை சேர்ந்த பால்துரை மகன் கிங்ஸ்டன் (வயது 22) என்பவர் வேலை செய்து வந்தார். இவர், டிப்ளமோ என்ஜினீயர் ஆவார்.

இந்த நிலையில் குறிப்பன்குளம் பகுதியில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை ஒன்று பழுதாகி கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. இதனை சரிசெய்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பணிக்கர்குளத்தைச் சேர்ந்த என்ஜினீயர் முத்துப்பாண்டி (25) என்பவர் வந்திருந்தார்.

இருவரும் பழுதான காற்றாலை டிரான்ஸ்பார்மரின் மின் இணைப்பை துண்டித்து பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்பு பணி முடிந்து, மீண்டும் டிரான்ஸ்பார்மருக்கு மின் இணைப்பை கொடுத்தபோது பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.

இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு திரண்டு வந்தனர். டிரான்ஸ்பார்மர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகில் முத்துப்பாண்டி, கிங்ஸ்டன் ஆகியோர் உடல் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்