ரெயிலில் பயணிக்க யூ.டி.எஸ். செயலி மூலம் டிக்கெட் விற்பனை இரு மடங்காக அதிகரிப்பு

ரெயிலில் பயணிக்க யூ.டி.எஸ். செயலி மூலம் டிக்கெட் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

Update: 2024-05-20 02:08 GMT

சென்னை,

ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள், ரெயில் நிலைய பதிவு அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தன. அங்கு, பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் இருப்பதற்காக, டிக்கெட் பெறுவதற்கு தானியங்கி எந்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, தற்போது செல்போனில் யூ.டி.எஸ். செயலி மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறை வந்தது. இதில், காகிதம் பயன்படுத்தாமல் டிக்கெட் பதிவு செய்வதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதாக பாராட்டும் பெற்றது.

இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும், யூ.டி.எஸ். செயலி மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறை பற்றி விளக்கி கூறவும், பிரசாரம் செய்யவும் மூத்த ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டது. அதன்படி அந்த குழுவினரும், இந்த செயலி பற்றிய விபரங்களை, பயணிகளுக்கு விளக்கி கூறினர். அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 26 ஆயிரம் பயணிகள், யூ.டி.எஸ். செயலி மூலம் டிக்கெட்டுகள் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே அந்த செயலி குறித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டதன் காரணமாக அதன் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 53 ஆயிரமாக உயர்ந்தது. இதன் மூலம், செல்போன் யூ.டி.எஸ். செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த சாதனையை எட்ட காரணமாக இருந்த ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், யூ.டி.எஸ். செல்போன் செயலியில், நமது செல்போன் எண்ணை உள்ளீடு செய்து ஓ.டி.பி. எண் பெற்று, அதில் நுழையலாம். இதனால் பாஸ்வேர்டு என்ற சங்கேத வார்த்தையை ஞாபகம் வைத்திருக்க வேண்டியதில்லை. இதுபோல், ரெயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால் வீட்டிலிருந்தபடியே பயணச்சீட்டு பதிவு செய்யலாம். தற்போது அதில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் செல்போன் பயணச்சீட்டு மூலம் பயணம் செய்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்