10 மாடிகள்; 68 அறைகள்: முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான புதிய விடுதி இன்று திறப்பு

சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி இன்று திறக்கப்படவுள்ளது.

Update: 2018-05-26 22:15 GMT
சென்னை,

தமிழக சட்டசபை முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கென்று தனி விடுதி சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியை இன்று நடக்கும் விழாவில் சபாநாயகர் ப.தனபால் திறந்து வைக்கிறார்.

இந்த விழா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலும் இன்று (27-ந்தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான புதிய விடுதிக்கு 30.11.12 அன்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அப்போதைய கவர்னர் ரோசய்யா ஆகியோர் முன்னிலையில் அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டினார். தமிழக சட்டசபையில் நடந்த வைர விழாவின்போது இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

10 மாடி கொண்ட இந்த புதிய விடுதி ரூ.33.63 கோடி செலவில், 76 ஆயிரத்து 821 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 68 அறைகள் உள்ளன. ஒரு அறையின் அளவு 593 சதுர அடி.

தமிழக முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு 60 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாதமொன்றுக்கு 5 நாட்கள் வரை அவர்கள் இந்த விடுதி அறையில் தங்கிக்கொள்ளலாம். வெளிமாநில சட்டசபை குழுக்களைச் சேர்ந்தவர்கள், இங்கு வரும்போது மீதமுள்ள 8 அறைகளில் தங்கிக்கொள்ளலாம்.

விடுதி அறையில் தங்குவதற்கு நாளொன்றுக்கு ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும். விடுதி அறையை ஆன்லைன் மூலமாகத்தான் முன்பதிவு செய்ய முடியும். சட்டசபை இணையதளத்தில் இதற்கென்று புதிய வசதி தொடங்கப்படுகிறது.

அந்த விடுதியில் அறை இருக்கிறதா?, யார்-யார் எத்தனை நாட்கள்?, எந்தெந்த அறையில் தங்கி இருக்கின்றனர்? என்ற விவரங்களையும் இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த புதிய விடுதியின் 10-வது மாடியில் மாநாட்டுக் கூடம் அமைந்துள்ளது. 250 பேர் பங்கேற்கும் வகையிலான அரங்கம் அதுவாகும். சட்டசபை செயலகம்தான் இந்த கட்டிடத்தை நிர்வகிக்க உள்ளது.

மேலும் செய்திகள்