264 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் முதல்-அமைச்சர் அறிவிப்பு

சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசினார்.

Update: 2018-06-01 22:45 GMT
சென்னை,

கடந்த 7 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 56 அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 19 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும். இதற்கென ஆண்டிற்கு 152 கோடியே 20 லட்சம் ரூபாய் தொடரும் செலவினம்.

2011-2012-ம் கல்வியாண்டு முதல் 2017-2018-ம் கல்வியாண்டு வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,232 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 2018-2019-ம் கல்வியாண்டில் 264 புதிய பாடப்பிரிவுகள் (68 இளங்கலை, 60 முதுகலை, 136 ஆராய்ச்சி) அறிமுகப்படுத்தப்படும். இப்பாடப் பிரிவுகளை கையாளுவதற்கு 683 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்கென அரசுக்கு தொடரும் செலவினமாக 68 கோடியே 46 லட்சம் ரூபாய் ஏற்படும். இப்பாடப் பிரிவுகளின் தேவைக்கென 324 வகுப்பறை கட்டிடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் 62 கோடியே 75 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் பர்கூர், கோவை, காரைக்குடி, சேலம், திருநெல்வேலி மற்றும் வேலூரில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகளிலுள்ள அரசு விடுதிகளில் தலா 150 மாணாக்கர்கள் தங்குவதற்கு ஏதுவாக 3 நபர்கள் தங்கும் வசதியுள்ள 50 அறைகள் கொண்ட விடுதிகள் 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது.

காட்டுத்தீயினை கட்டுப்படுத்த வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீயினால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய காட்டுப் பகுதிகள் பரவலாக உள்ளதால், களத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு காட்டுத் தீயினை கட்டுப்படுத்தவும், துரதிருஷ்டவசமாக அத்தீயில் சிக்கிக் கொள்ளும் மக்களை மீட்க சிறப்பு பயிற்சி மற்றும் அடிப்படை உபகரணங்கள் வழங்கவும் 2 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது வனத்துறை தலைமை அலுவலகம் பனகல் மாளிகையில் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள இடப்பற்றாக் குறையை கருத்தில் கொண்டு, வேளச்சேரியில் அமைந்துள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வனத்துறை தலைமை அலுவலகக் கட்டிடம் 70,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இரு தொகுதி கட்டிடங்களாக 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

வனச் சரகங்களுக்கு வழங்கிட 125 புதிய ஜீப்புகள், 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் கலாசாரம் மற்றும் சூழல் நட்பு வாழ்க்கையை அடையாளம் கண்டு, அவர்களின் கலாசார வளமையை மேம்படுத்தவும், இயற்கை நட்பு வாழ்க்கை முறையைத் தெரியப்படுத்தவும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பக புற எல்லைப் பகுதியில் அருங்காட்சியகம் மற்றும் பழங்குடியினர் சூழல் கலாசார கிராமம் ஒன்று 7 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். இது தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை பெரிய அளவில் ஏற்படுத்தும். இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்