தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார். #SterliteProtest #ActorVijay

Update: 2018-06-06 01:38 GMT
தூத்துக்குடி,

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி பேரணி நடந்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.  

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் புபுல் தத்தா பிரசாத், ராஜ்பீர்சிங், லால்பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகியோர் வந்து உள்ளனர்.

இவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் இறந்தவர்களின் உறவினர்கள், காயம் அடைந்தவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மேலும், வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் வீடுகளுக்கு நடிகர் விஜய் நேற்று நள்ளிரவு சென்றார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு பலியானோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

மேலும் செய்திகள்