துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற நாளை மறுதினம் தூத்துக்குடி பயணம்

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற முதல்வர் பழனிச்சாமி நாளை மறுதினம் தூத்துக்குடி செல்கிறார். #EdappadiPalanisamy #ThoothukudiSterlite

Update: 2018-06-07 04:57 GMT
சென்னை

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வரும் 9-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி செல்கிறார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கடந்த மாதம்  22-ஆம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது 144 தடையை மீறி சென்ற பேரணியில் கலவரம் வெடித்தது.  இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக  போலீசார் தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 182 பேரை  கைது செய்து உள்ளனர்.  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டது.  இதனையடுத்து 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி  முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. ஆலையில் வாயிலில் அதற்கான ஆணையும் ஒட்டப்பட்டது.

ஒரு வாரம் 144 தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 27-ஆம் தேதி அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து மே 28-ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் முதல்வர் சம்பவ இடத்துக்கு செல்லாதது விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில் நாளை மறுதினம் (ஜூன் 9) அவர் தூத்துக்குடி செல்கிறார். அங்கு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

மேலும் செய்திகள்