ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் திவாகரன் மகள், மருமகன் ஆஜராகி வாக்குமூலம்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் திவாகரனின் மகள் டாக்டர் ராஜ் மாதங்கி, மருமகன் டாக்டர் விக்ரம் ஆகியோர் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

Update: 2018-06-14 22:30 GMT
சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அந்த மருத்துவமனையில் திவாகரன் மகள் டாக்டர் ராஜ் மாதங்கி, அவருடைய கணவர் விக்ரம் ஆகியோர் டாக்டராக பணியாற்றி வந்தனர். இதனால், அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது குறித்து இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஆறுமுகசாமி ஆணையம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி நேற்று பகல் 11 மணி அளவில் ஆணையம் முன்பு அவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதேபோல் அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த எஸ்.ஜார்ஜ் 2-வது நாளாக நேற்று பகல் 11.35 மணிக்கு ஆஜரானார். இவர்களிடம் மதுரை வக்கீல் எஸ்.பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் சுமார் 2 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தனர்.

டாக்டர் விக்ரம் அளித்த வாக்குமூலத்தில், ‘2016-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஜெயலலிதாவுக்கு ‘டிரக்கியாஸ்டமி’ என்ற மூச்சுகுழல் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சை அளித்த பாபு ஆபிரகாம் தலைமையிலான மருத்துவகுழுவில் நானும் இடம் பெற்றேன். ஜெயலலிதாவுக்கு மற்ற உடல் உபாதைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக திவாகரனிடம் எதுவும் பேசவில்லை. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை’ என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

டாக்டர் ராஜ் மாதங்கி, ‘செயற்கை சுவாசம் (வென்டிலேட்டர்) தொடர்பாக தெரிந்து கொள்வதற்காக 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி என்னை ஜெயலலிதா அழைத்ததின்பேரில் அங்கு சென்றேன். அன்றைய தினம் ‘செயற்கை சுவாசம் ஜெயலலிதாவுக்கு பொறுத்துவது தொடர்பாக சசிகலா, டாக்டர்கள் சிவகுமார், வெங்கடேஷ் ஆகியோரிடம் சம்மதம் பெற்றதாக தான் மருத்துவ குறிப்புகள் கூறுகிறது. இதயம், நுரையீரல், தைராய்டு, நீரிழிவு என பல்வேறு நோய்களால் சிரமப்பட்ட ஜெயலலிதா போன்ற யாராக இருந்தாலும், மருத்துவரீதியாக தேற்றிக் கொண்டு வருவது கடினம். அது கவலைகிடமான நிலை’ என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

மேலும் மருத்துவரீதியாக கேட்ட கேள்விகளுக்கும் டாக்டர் ராஜ் மாதங்கி விளக்கம் அளித்தார். முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் அளித்த வாக்குமூலம் வருமாறு.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மருத்துவமனை வெளியே சென்னை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டிலும். உட்புறம் உளவுத்துறை ஐ.ஜி. சத்யமூர்த்தி மற்றும் துணை ஆணையர் சுதாகர் தலைமையிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதுதவிர, கூடுதலாக இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பும், ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இந்த 4 பிரிவினரும் ஒருங்கிணைந்து எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. போயஸ்கார்டனில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியபோது, சசிகலா தங்கியிருந்த அறையில் குட்கா ஊழல் குறித்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அரசுக்கு எழுதிய கடிதம் கிடைத்தது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது. பத்திரிகைகள் வாயிலாக தான் தெரிந்துகொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆகியோரிடம் மறுவிசாரணை நடத்துவதற்காக 16-ந் தேதி (நாளை) ஆஜராக ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்திய ஜெயலலிதாவின் வங்கி கணக்கு உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லாமேரீஸ் கிளை முன்னாள் மேலாளர் மகாலட்சுமி, அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், சாந்தாராம், சர்க்கரை நோய் தடுப்பு மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக 16-ந் தேதி அவர்கள் அனைவரும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் சசிகலா தரப்பு வக்கீல் செந்தூர்பாண்டியன் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக டெல்லி செல்லவிருப்பதால் எங்களால் 16-ந்தேதி ஆணையத்தில் ஆஜராக இயலாது. எனவே மாற்று தேதி வழங்குமாறு கூறியுள்ளார். இந்த தகவல்களை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

விசாரணை முடிந்து டாக்டர்கள் விக்ரம், ராஜ் மாதங்கி மற்றும் முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் ஆகியோர் ஆணையத்தில் இருந்து 1.30 மணி அளவில் வெளியே வந்தனர். அப்போது நிருபர்கள் அவர்களிடம் கேள்வி கேட்டபோது பதிலளிக்காமல் மவுனமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்