“ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சுருட்டிய தினகரன்” திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை

ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் சுருட்டிக் கொண்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-06-19 23:15 GMT
வேடசந்தூர்,

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தனது பேச்சால் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. திண்டுக்கல்லில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இட்லி சாப்பிட்டார் என்று தான் கூறியது பொய் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதேபோல் திண்டுக்கல் கட்சி அலுவலகத்தில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், பணம் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

திண்டுக்கல்லில் நடந்த மற்றொரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோடியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார் என்று கூறுவதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் சுருட்டிக் கொண்டார் என்ற அர்த்தத்தில் பேசி மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு பேசினார். அவர் பேசியது வருமாறு:-

தங்கதமிழ்செல்வன் ராஜினாமா செய்வதாகவும், மீண்டும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சொல்கிறார் என்றால் அவர் சபாநாயகர் தீர்ப்பை ஒத்துக்கொள்வதாக தான் அர்த்தம். கடந்த 8 மாதங்களாக தலைவன் என்று சொன்ன தங்கதமிழ்செல்வன், தற்போது தினகரனால் தூக்கி எறியப்பட்டுள்ளார்.

எல்லோரையும் அடிமைபோல தினகரன் நடத்துவதால் தற்போது யாரும் அங்கு செல்வதில்லை. இதனால் தான், நொந்து போய் தங்கதமிழ்செல்வன் தனக்கு எம்.எல்.ஏ. பதவி வேண்டாம் என்கிறார். கொள்ளையடித்த உங்கள் கும்பலால் தான், ஜெயலலிதா சிறைக்கு சென்றார். மனம் நொந்துபோய் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

உங்களுக்கு தினந்தோறும் சோதனை வருகிறது என்று சொன்னால், அதற்கு ஜெயலலிதாவின் ஆன்மா உங்களை தண்டித்து கொண்டிருப்பதே காரணம் ஆகும்.

மகாத்மா காந்தி, புத்தரை போல தினகரனை பேசுகிறார்கள். அவரால் கட்சி வளர்ந்ததாகவும், இந்த ஆட்சி நடப்பதை போலவும் கூறி வருகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுத்தால், சும்மாவா இருக்க முடியும்.

சட்டப்படி விளக்கம் அளிக்க அவர்களுக்கு ஒரு மாதம் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்கவில்லை. மைசூரு, அமெரிக்கா என்று ஜாலியாக சென்றனர்.

ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக்கொண்டு அல்லது ஸ்டாலின் மூலம் வாங்கி கொண்டு ஸ்டாலினை முதல்-அமைச்சராகவும், தினகரனை துணை முதல்-அமைச்சராகவும், 18 பேரும் மந்திரிகளாகவும் ஆகி விடலாம் என்ற அவர்களின் கற்பனை நாடகத்தை பார்த்து கொண்டு சும்மாவா? இருக்க முடியும்.

சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி கூறி இருக்கிறார். இன்னொரு நீதிபதி செல்லாது என்று கூறியுள்ளார். 3-வது நீதிபதி என்ன சொல்கிறார் என்பதை கேட்டுவிட்டு அடுத்த நடவடிக்கைக்கு செல்வோம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.20 நோட்டை கொடுத்து, ரூ.10 ஆயிரம் கொடுப்போம் என்று மக்களிடம் பணத்தாசையை காட்டி ஏமாற்றி தினகரன் வெற்றி பெற்றார். ஆனால் மறுபடியும் அங்கே போக முடியவில்லை.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும், தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மறுபடியும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியுமா? என்று சவால் விடுகிறேன். அவர்களால் வெற்றி பெற முடியாது. ஒருவருக்கு கூட டெபாசிட் கிடைக்காது. அப்படி அவர்கள் டெபாசிட் வாங்கினால் நாங்கள் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் செய்திகள்