தமிழக அமைச்சரவை கூட்டம்; முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது

முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. #TamilnaduCabinetMeeting #EdappadiPalanisamy

Update: 2018-06-27 01:34 GMT
சென்னை,

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

அதன்பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், எய்ம்ஸ் மருத்துவமனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு குறிப்பிட்டு தந்த 5 இடங்களை பார்வையிடுவதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தாரித்ரி பாண்டா தலைமையில் உயர்மட்டக்குழுவினர் வந்தனர். அவர்களும் பார்வையிட்டு அது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கினார்கள்.

இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி டெல்லியில் இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட இருப்பதாக முடிவு செய்து, அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளது. 3 ஆண்டுகளாக நீடித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்து இருக்கிறது.

இந்த மருத்துவமனை மதுரைக்கு அருகில் இருக்கும் தோப்பூர் என்ற இடத்தில் ரூ.1,500 கோடி மதிப்பில் 200 ஏக்கரில் அமைய இருக்கிறது. இதில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை, 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் விதமாகவும், படிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவதற்கு மத்திய அரசுக்கு, தமிழக அரசு அத்தனை உதவிகளையும் செய்யும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்நிலையில், முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்