வைகோவை தரக்குறைவாக பேசியதாக வக்கீல் மீது ம.தி.மு.க.வினர் தாக்குதல் போலீசார் விசாரணை

தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜரான வைகோவை தரக்குறைவாக பேசியதாக வக்கீல் மீது ம.தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-06 21:33 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 28-2-2009 அன்று, புதிதாக அனல் மின்நிலையம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி வந்தார். அவரை கண்டித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார், வைகோ உள்பட 159 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி கோர்ட்டுக்கு வந்தார். அவர் கோர்ட்டு உள்ளே செல்லும்போது, சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் அருகே வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்த சில வக்கீல்கள் வைகோவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் வைகோ 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பிஸ்மிதா முன்னிலையில் ஆஜர் ஆனார். அப்போது அவர் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வருகிற 12-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட்டு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 56 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்கள்.

அதன்பிறகு வைகோ மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கோர்ட்டில் இருந்து மதியம் 2.30 மணிக்கு வெளியே வந்தனர். கோர்ட்டு வளாகத்தில் நடந்து சென்றுகொண்டு இருந்தபோது, அங்கு நின்று கொண்டு இருந்த சில வக்கீல்கள் மீண்டும் சத்தம் போட்டனர். அப்போது ஒரு வக்கீல் வைகோவை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ம.தி.மு.க.வினர் ஆத்திரம் அடைந்தனர். சுமார் 15-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சத்தம் போட்டபடி, அந்த வக்கீல்கள் நின்று கொண்டு இருந்த பகுதியை நோக்கி வேகமாக சென்றனர்.

இதனால் அங்கிருந்த வக்கீல்கள் வேகமாக வெளியேறி சென்றுவிட்டனர். ஒரு வக்கீல் மட்டும் சிக்கி கொண்டார். அந்த வக்கீலை ம.தி.மு.க.வினர் சரமாரியாக தாக்கினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து தடுத்து நிறுத்தினர். கோர்ட்டு வளாகத்தில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்