உரிமம் இன்றி செயல்படும் 256 செயற்கை மணல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு நோட்டீஸ்

முறையான உரிமம் இன்றி செயல்படும் 256 செயற்கை மணல் தயாரிப்பு நிறுவனங் களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2018-07-07 20:45 GMT
சென்னை, 

ஆற்று மணலுக்கு மாற்றாக ‘எம்.சாண்ட்’ என்ற செயற்கை மணலை கட்டிடப்பணிக்கு பயன்படுத்த தமிழக அரசு, பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆற்று மணலை விட ‘எம்.சாண்ட்’ அதிக உறுதியுடன் இருப்பதால் புதிதாக அரசு கட்டிடங்கள் கட்ட இதனை முழுமையாக பயன்படுத்துவதுடன், பொதுமக்களும் தாங்கள் கட்டும் கட்டிடங்களுக்கும் செயற்கை மணலை அதிகம் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழக கட்டுமானப்பணிகளுக்கு தினமும் 35 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. ஆனால் 12 ஆயிரத்து 500 முதல் 18 ஆயிரம் லோடு செயற்கை மணல் மட்டுமே கிடைக்கிறது. 7 ஆயிரம் லோடு ஆற்றுமணல் மட்டுமே கிடைக்கிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இதற்கிடையே ஆற்று மணல் போன்று செயற்கை மணலில் உறுதித்தன்மை இருக்குமா? என்று மக்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், திரையரங்குகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

இந்தநிலையில் செயற்கை மணல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக தொழில்நுட்ப வல்லுனர் குழு கூட்டம் சென்னை, எழிலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் மனோகரன் (கட்டிடம்) தலைமை தாங்கினார். இதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் ‘எம்.சாண்ட்’ செயற்கை மணலை தயாரிக்கும் பணியில் 320 நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறைக்கு பட்டியல் வழங்கி இருந்தது. இவர்கள் முறையாக பொதுப்பணித்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த துறை அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டு இருந்தது.

உரிமம் கோரும் செயற்கை மணல் தயாரிக்கும் குவாரிகள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும், இதற்காக அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் குவாரிக்கான ஒப்புதல், தரம் குறித்த சிறப்பு சான்றிதழ், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து நீர் மற்றும் காற்று மாசு சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். ஜி.எஸ்.டி. பதிவு எண், வணிகவரி துறை சான்றிதழ், நிறுவன விவரங்கள் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியபடி நவீன எந்திரங்களை வைத்திருக்க வேண்டும்.

இவை அனைத்தும் இருக்கிறதா? என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நேரில் சென்று ஆய்வு செய்து, செயற்கை மணலை மாதிரி எடுத்து ஐ.ஐ.டி. ஆய்வகங்களில் சோதனை நடத்தி நிபுணர் குழு ஒப்புதலுக்கு பின்னர் உரிமம் வழங்கப்படும்.

தமிழகத்தில் செயற்கை மணல் தயாரிக்கும் பணியில் 320 நிறுவனங்கள் ஈடுபட்டாலும் 64 நிறுவனங்கள் உரிமம் கேட்டு விண்ணப்பித்ததில் 44 நிறுவனங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. மீதியுள்ள 256 நிறுவனங்கள் முறையாக பொதுப்பணித்துறையில் உள்ள தொழில்நுட்ப நிபுணர் குழுவிடம் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும். இதற்காக 256 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். தரமற்ற செயற்கை மணல் தயாரிக்கப்படுவது தெரியவந்தால் உரிமம் ரத்து செய்யப்படும். இதுபோன்ற நிபந்தனைகளுடன் அனுமதி தர ஒப்புக்கொண்டு உள்ளது. போலிகளை கண்காணிக்க குழு அமைக்கவும் வல்லுனர் குழு அறிவுறுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்