குடிமராமத்து திட்ட பணிகளை கண்காணிக்க 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் தமிழக அரசு அறிவிப்பு

குடிமராமத்து திட்ட பணிகளை கண்காணிப்பதற்காக 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-07-08 23:00 GMT
சென்னை, 

குடிமராமத்து திட்ட பணிகளை கண்காணிப்பதற்காக 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

குடிமராமத்து பணிகள்

தமிழகத்தில், 2016-17-ம் ஆண்டுக்கான குடிமராமத்து திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் 1,511 ஏரிகளில் புணரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் ஏரிகள் புணரமைப்பு பணிக்கான ரூ.328.95 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.

இந்த திட்ட அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளித்த நிலையில், கடந்த வாரம் குடிமராமத்து பணிகளை பாசன விவசாயிகள் சங்கம், விவசாய அமைப்புகள் சார்பில் தொடங்கப்பட்டன.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

1,511 ஏரிகளில் ஆயிரம் ஏரிகளில் புணரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 511 ஏரிகளில் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் சூழ்நிலையில், புணரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி குடிமராமத்து பணிகளை கண்காணிக்கும் வகையில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

ககன்தீப் சிங் பேடி

அதன்படி, திருவண்ணாமலை பெண்ணையாறு மற்றும் கடலூர் வடிநில வட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பு, தமிழக அரசின் வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வேலூர் நீர்வளத்துறை திட்டவட்டம் மற்றும் சென்னை பாலாறு வடிநில வட்டம் மற்றும் வேலூர் குளம் நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அமுதா நியமிக்கப்பட்டு உள்ளார்.

பெரியார், வைகை வடிநில வட்டம் மற்றும் கீழ் வைகை வடிநில வட்டத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சாலும், வைப்பார் வடிநில வட்டம் மற்றும் தாமிரபரணி வடிநில வட்ட பகுதியை பேரிடர் மேலாண்மை கமிஷனர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் கண்காணிக்க உள்ளனர்.

தலைமை செயலாளர் உத்தரவு

சேலம் மேல் காவிரி வடிநில வட்டம் மற்றும் பழனி சிறப்பு திட்ட வட்டம் ஆகியவற்றில் நடக்கும் குடிமராமத்து பணியை திட்ட வளர்ச்சித்துறை செயலாளர் ஆஷிஸ் வச்சானி கண்காணிப்பார். நடு காவிரி வடிநில வட்டம் மற்றும் கீழ் காவிரி வடிநில வட்டத்தை தேசிய சுகாதார மைய இயக்குனர் தாரேஸ் அகமதுவும், ஈரோடு பவானி வடிநில வட்டம் மற்றும் பரம்பிகுளம் ஆழியாறு வடிநில வட்டத்தை கால்நடைத்துறை செயலாளர் கே.கோபாலும் கண்காணிக்க உள்ளனர்.

இந்த உத்தரவை தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்து உள்ளார்.

மேலும் செய்திகள்