லோக் ஆயுக்தா வரம்புக்குள் அமைச்சர் என்றால் முதலமைச்சரும் அடக்கம் என மசோதாவில் தகவல்

அரசு ஊழியர்களின் மீதான ஊழல் புகார்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் லோக் ஆயுக்தா வரம்புக்குள் அமைச்சர் என்றால் முதலமைச்சரும் அடக்கம் என மசோதாவில் தகவல். #TNAssembly #lokayukta #Jayakumar

Update: 2018-07-09 07:28 GMT
சென்னை

தமிழக சட்டசபையில்  அமைச்சர் ஜெயக்குமார், லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார்.  எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு அமைச்சர் ஜெயக்குமார் இந்த சட்டத்தை நிறைவேற்றினார்.ஆய்வுக்குப்பின் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படும்.

அரசு ஊழியர்களின் மீதான ஊழல் புகார்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் லோக் ஆயுக்தா வரம்புக்குள் அமைச்சர் என்றால் முதலமைச்சரும் அடக்கம் என மசோதாவில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டிலுள்ள 17 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற எடுத்த நடவடிக்கை குறித்து ஜூலை 10ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த மசொதா மூலம் லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தப்படும் மாநிலத்தில், ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் அமர்வு அமைக்கப்படும்.  இந்த அமர்வில் அரசு ஊழியர்கள், முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும். சட்டப்பூர்வ தன்னாட்சிமிக்க இந்த அமைப்பு, புகார்களை விசாரிக்க ஆளுநர் அல்லது அரசின் அனுமதியை பெற தேவையில்லை.

மேலும், லோக் ஆயுக்தாவில் வரும் புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளோ அல்லது செஷன்ஸ் மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிபதிகளோ நியமிக்கப்படுவார்கள். அந்த நீதிபதிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் போலீசார், முழு அதிகாரத்துடன் எந்த குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவார்கள்.

ஆரம்பகட்ட விசாரணையிலேயே குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால், புகாருக்கு உள்ளானவர்களின் சொத்துக்களை முடக்க லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம் உண்டு. லோக் ஆயுக்தாவில் நடைபெறும் விசாரணை பற்றி, உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ கேள்வி எழுப்ப முடியாது.

குற்றச்சாட்டுகளுக்கு போதிய சாட்சியங்கள் இருக்கும்பட்சத்தில், அனைத்து ஆவணங்களையும் குற்றவியல் விசாரணை இயக்குநரகத்துக்கு லோக் ஆயுக்தா அனுப்பி வைக்கும். அதன்பிறகு, அந்த வழக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

மேலும் செய்திகள்