6 வயது சிறுமி கொடூர கொலை: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை உறுதி

6 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்துக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2018-07-11 00:51 GMT
சென்னை,

சென்னை, போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது 6 வயது மகள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று மாயமானார். இதுகுறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். பின்னர், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தஷ்வந்தின் தந்தை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கமிஷனரின் உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து, தஷ்வந்த் ஜாமீனில் வெளியில் வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி தன்னுடைய தாய் சரளாவை தஷ்வந்த் கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தஷ்வந்தை மும்பையில் கைது செய்தனர்.

இதற்கிடையில், சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கை செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு நீதிபதி வேல் முருகன் விசாரித்து தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து, கடந்த பிப்ரவரி 19-ந் தேதி தீர்ப்பு அளித்தார்.

இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்ய, இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல, இந்த தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் சி.எமிலியாஸ், அரசு குற்றவியல் வக்கீல்கள் முகமது ரியாஸ், பிரபாவதி, கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர் சார்பில் வக்கீல் வி.கண்ணதாசன், மனுதாரர் தஷ்வந்த் சார்பில் பி.வி.செல்வராஜன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தனர்.

அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

தஷ்வந்த் தரப்பு வக்கீல் தன்னுடைய வாதத்தில், இந்த கொலை வழக்கில் சான்றுப் பொருட்களை பறிமுதல் செய்ததில் பல குளறுபடிகள் உள்ளன. சாட்சிகளும் முன்னுக்குப்பின் முரணாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதை கீழ் கோர்ட்டு கவனிக்க தவறிவிட்டது. எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். 6 வயது சிறுமி என்று கூட பாராமல், பாலியல் கொடுமை செய்து, கொலை செய்து, அந்த உடலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தஷ்வந்த் எரித்துள்ளார். அவரது செயல் கொடூரமானது. எனவே, அரிதிலும், அரிதான வழக்காக கருதி, தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டனர்.

இதேபோல, சிறுமியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீலும் வாதிட்டார்.

சிறுமியை கொடூரமாக, மனிதத்தன்மையின்றி தஷ்வந்த் கொலை செய்துள்ளார். இதற்காக அவருக்கு கீழ் கோர்ட்டு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரை, 6 வயது சிறுமியை அவரது பெற்றோர் இழந்துள்ளனர். அவர்களது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியை தந்த மகள் உயிரோடு இல்லை. காட்டுமிராண்டித்தனமாகவும், கொடூரமாகவும் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தன் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் தெரிந்த நொடிப்பொழுதில் இருந்து அந்த பெற்றோர் அனுபவித்து வரும் வேதனையை வார்த்தைகளால் கூற முடியாது.

இது ஒரு புறம் இருக்க, இந்த வழக்கில், போலீசார் அனைத்து குற்றச்சாட்டுகளையும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளனர். அதனால், தஷ்வந்த் குற்றவாளி என்பதை உறுதி செய்கிறோம். அதேநேரம், அவருக்கு வழங்க வேண்டிய தண்டனை குறித்து பரிசீலிக்க வேண்டியதுள்ளது.

குற்றவாளிக்கு தண்டனை வழங்குவது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அரிதிலும், அரிதான வழக்கில் மட்டுமே உச்சபட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் கூறியுள்ளது.

இந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட்டு கூறும் அரிதிலும் அரிதான வழக்காக கருத முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

நம்முடைய அரசியல் சாசனம், ஆரோக்கியமான, மகிழ்ச்சிகரமான, பாதுகாப்பான வாழ்க்கையை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது.

தஷ்வந்த் ஜாமீனில் வெளியில் இருந்தபோது, தன் தாயையும் கொலை செய்துள்ளார். குற்றவாளியின் இந்த செயலை பார்க்கும்போது, அவரை சீர்திருத்துவது என்பது கனவாகத்தான் இருக்கும் என்பதை முடிவு செய்து கீழ் கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனையை விதித்துள்ளது.

மேலும், குற்றவாளியின் மனநிலையின் கொடூரம், அவரது குற்றத்தைவிட கொடூரமாக உள்ளது. இவரது செயலால், ஒரு மொட்டு மலராவதற்கு முன்பே சாம்பலாக்கப்பட்டு விட்டது.

அதுவும், குற்றத்தை மறைப்பதற்காக, அந்த சிறுமியின் உடலை தீ வைத்து எரித்தது, கொடூரத்தின் உச்சக்கட்டமாகும். அதுவும் தன்னுடைய காம வெறியை தனித்துக்கொள்ள ஒரு சிறுமியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

ஒரு அப்பாவிக்கு தண்டனை வழங்குவது நீதி பரிபாலனத்தின் தவறாக இருக்கலாம். ஆனால், உண்மையான குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்காமல் இருந்தால், அது நீதி பரிபாலனத்தின் ஒட்டுமொத்த பிழையாக மாறிவிடும்.

தற்போது குற்றவாளியின் வயதை கருதி அவருக்கு தண்டனையை குறைக்க முடியாது. சின்ன வயதில் இதுபோன்ற குற்றச்செயல்களை செய்பவர்கள், அதே குற்றத்தை தொடர்ந்து செய்ய வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. சிறுவயதில் இதுபோல பாலியல் ரீதியான துன்பத்துக்கு ஆளாகும் பெண்கள், அந்த துயர சம்பவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாமல், மனதுக்குள் வைத்து அழுதுகொண்டு இருக்கின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களால், திருமணத்துக்கு பின்பு அந்த பெண்களின் இல்லற வாழ்விலும் பிரச்சினை வருகிறது. எதற்காக இவர்கள் இப்படி ஒரு துயரங்களை அனுபவிக்க வேண்டும்?

தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைத்து, ஆயுள் தண்டனையாக மாற்ற முடியாது. அவ்வாறு தண்டனையை குறைக்க சட்டரீதியாக எந்தவொரு நியாயமும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

காமவெறியனாக, அரக்கத்தனமாக இதுபோன்ற செயலை செய்த தஷ்வந்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது. ஒரு பச்சிளம் குழந்தை அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை அவர் சிதறடித்துவிட்டார். தனது காமவெறியை தீர்த்துக்கொள்ள அந்த சிறுமியை ஒரு பொம்மை போல பயன்படுத்தியுள்ளார். இறுதியில் அந்த உயிரையும் உலகில் இருந்து பிரித்துவிட்டார்.

எனவே, இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக கருதுகிறோம். தஷ்வந்துக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்கிறோம். தண்டனையை எதிர்த்து தஷ்வந்து செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்