முன்ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்றாத பாரதிராஜாவுக்கு ஐகோர்ட்டு கண்டனம்

முன்ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்றாத இயக்குனர் பாரதிராஜாவுக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2018-07-11 22:00 GMT
சென்னை, 

முன்ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்றாத இயக்குனர் பாரதிராஜாவுக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த ஜனவரி 18–ந் தேதி நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் பாரதிராஜா, விநாயகரை இறக்குமதி கடவுள் என்றும், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு அவமானம் ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசினார்.

இதுதொடர்பாக நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாரதிராஜா மீது வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பாரதிராஜா மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து பாரதிராஜாவுக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அதில், சைதாப்பேட்டை கோர்ட்டில் உத்தரவாதம் அளித்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் 3 வாரங்களுக்குள் போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கடந்த மே 23–ந் தேதி உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும், இதற்கு காலஅவகாசம் வேண்டும் என்றும் இயக்குனர் பாரதிராஜா தரப்பில் புதிதாக மனுதாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி பி.ராஜமாணிக்கம் விசாரித்தார். அப்போது, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பாரதிராஜா, முன்ஜாமீன் வழக்கில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். கடும் கண்டனத்தையும் தெரிவித்தார்.

பின்னர், இந்த மனு மீதான விசாரணையை வருகிற 17–ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று பதில் மனு தாக்கல் செய்யும்படி வடபழனி போலீசாருக்கும், புகார்தாரருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்