தொடக்கக்கல்வி இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

முறையான கட்டிடம் இல்லாமல் பள்ளிக்கூடம் இயக்குவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தொடக்கக்கல்வி இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-11 21:47 GMT
சென்னை, 

முறையான கட்டிடம் இல்லாமல் பள்ளிக்கூடம் இயக்குவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தொடக்கக்கல்வி இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, சின்னக் கொடுங்கையூரை சேர்ந்தவர் சசிகுமார். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் பள்ளி தீ விபத்து குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சம்பத் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், தீ பிடிக்காத வகையில் கட்டிடங்களில் பள்ளிக்கூடங்கள் இயங்கவேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விதிமுறைகளை மீறி சென்னை, புழல் அருகேயுள்ள கன்னடப்பாளையத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு முறையான கட்டிடங்கள் இல்லை. ‘ஆஸ்பெஸ்டாஸ் சீட்’டில் பள்ளிக்கூடம் இயங்குகிறது.

விதிமுறைகளை மீறி கட்டிடம் இல்லாமல் செயல்படும் இந்த பள்ளிக்கூடம் குறித்து கடந்த மார்ச் 2-ந் தேதி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு மனுவுடன் பள்ளிக்கூடத்தின் தற்போதைய நிலையை விளக்குவதற்காக புகைப்படங்களையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த புகைப்படங்களை பார்த்த நீதிபதி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அரசு தரப்பில் ஆஜரான வக்கீலிடம், “கும்பகோணம் பள்ளி தீ விபத்தை போல மற்றொரு சம்பவம் நடந்தால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? கட்டிடமே இல்லாத பள்ளியை கூரையில் நடத்துவற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது?. கழிவறைகள் எல்லாம் திறந்த நிலையில் உள்ளது. மறைவுக்காக சேலையை கட்டி தொங்க விட்டுள்ளனர். எப்படி இந்த பள்ளிக்கூடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

பின்னர், “இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் வருகிற 18-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்