பா.ஜ.க. பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்: பொதுமக்களுடன் கலந்துரையாடி கட்சியை பலப்படுத்த திட்டம்

பொதுமக்களுடன் கலந்துரையாடி பா.ஜ.க.வை பலப்படுத்துவதற்காக அக்கட்சியின் பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

Update: 2018-07-12 22:15 GMT
சென்னை, 

பொதுமக்களுடன் கலந்துரையாடி பா.ஜ.க.வை பலப்படுத்துவதற்காக அக்கட்சியின் பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக கமலாலயத்தில் 17-ந்தேதி பயிற்சி முகாம் நடக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வர இருப்பதையொட்டி சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த பா.ஜ.க. அகில இந்திய தலைவர் அமித்ஷா, தமிழக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி, கட்சியை பலப்படுத்த ஆலோசனைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க.வை வலுப்படுத்தும் வகையில் புதிய செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பொறுப்பாளர்கள் இந்த மாதம் முதல் தொடர்ந்து 5 மாதங்கள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் சுழற்சி முறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

சுற்றுப்பயணம் செய்பவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு 17-ந்தேதி தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. சுற்றுப்பயண ஒருங்கிணைப்பாளராக எஸ்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்களுடன் பொறுப்பாளர்கள் நெருங்கி பழகி, அவர்களுடன் கலந்துரையாடி கட்சியை வளர்க்க வேண்டும், மக்கள் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், தொகுதி வாரியாக புதிய உறுப்பினர்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட வேண்டும், அனைத்து பகுதிகளிலும் 30-ந்தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் பா.ஜ.க. தலைமையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பா.ஜ.க. வெளியிட்டுள்ள பட்டியலின்படி, கன்னியாகுமரி, மதுரை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு மூத்த தலைவர் இல.கணேசன், ஜி.கே.நாகராஜனும், சென்னை தெற்கு, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு தேசிய செயலாளர் எச்.ராஜா, கலிவரதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்