கல்வி அதிகாரியை மிரட்டிய வக்கீல் குமாஸ்தாவுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்

தனியார் பள்ளிக்கூடம் தொடர்பான வழக்கில், கல்வி அதிகாரியை மிரட்டிய வக்கீல் குமாஸ்தாவுக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2018-07-13 22:15 GMT
சென்னை, 

சென்னை அடுத்துள்ள கத்திவாக்கத்தில் உள்ள புனிதமேரி நர்சரி பள்ளியில் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இல்லை என்று செம்பியத்தை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஒரு அதிகாரியை நியமித்து, இந்த பள்ளிக்கூடத்தை திடீரென ஆய்வு செய்து அறிக்கை பெற்று தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி நேரில் ஆஜராகி, ஐகோர்ட்டின் உத்தரவின்படி, பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்து, அந்த பள்ளிக்கூட நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி அறிக்கையை தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் சி.முனுசாமி, முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்விக்கு, மனுதாரர் ‘வாட்ஸ்-அப்‘ மூலம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். பின்னர் அவரை மிரட்டும்விதமாக போனில் பேசியுள்ளார். இதனால், அதிகாரி அச்சத்தில் உள்ளார்‘ என்று கூறினார்.

இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் அதிகாரிக்கு எப்படி குறுஞ்செய்தி அனுப்பலாம்?, போனில் மிரட்டலாம்?. இதற்காக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம்’ என்று நீதிபதிகள் கூறினர்.

அதற்கு மனுதாரர் தேவராஜன், ‘ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு குறித்து தான் அவருக்கு தகவல் தெரிவித்தேன்’ என்று பதிலளித்தார். பின்னர் தன்னுடைய செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பை நீதிபதிகளிடமும், அதிகாரி திருவளர்செல்வியிடமும் மனுதாரர் தேவராஜன் கேட்டார்.

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் தன்னை தட்டச்சர் என்றும், வக்கீல் குமாஸ்தா என்றும், பொதுமக்களுக்கு பல விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர் என்றும் கூறுகிறார்.

அவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளின் நலன் கருதி, ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம்.

எங்களது உத்தரவின் அடிப்படையில், கல்வி அதிகாரிகளும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். தகுந்த நடவடிக்கையும் எடுத்துள்ளனர். அதிகாரிகளின் நடவடிக்கை எங்களுக்கு திருப்தி அளிக்கிறது.

அதேநேரம், மனுதாரர் இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரை போனில் பேசி மிரட்டியதாக சிறப்பு அரசு பிளடர் கூறுகிறார். ஆனால், மனுதாரர் தான் அதிகாரிகளை மிரட்டவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவை அவருக்கு தெரிவித்தேன் என்று கூறினார்.

ஆனால், அவ்வாறு தகவல் தெரிவிக்கவேண்டும் என்று மனுதாரருக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிடவில்லை. இவரது செயலை ஏற்க முடியாது. கத்திவாக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு எதிராக மனுதாரர் இந்த வழக்கை ஏன் தொடர்ந்தார்? என்று தெரியவில்லை.

குறிப்பாக அந்த பகுதியில் அவர் வசிக்கவும் இல்லை. அதிகாரியை மிரட்டியதற்காக அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பை அதிகாரியிடம் கேட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்ற செயலை எதிர்காலத்தில் அவர் செய்யக்கூடாது. இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.

மேலும் செய்திகள்