ஆசிரியர்கள் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ முறை ரத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2018-07-16 23:45 GMT
சென்னை, 

சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மாவட்ட மைய நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அதன்மூலம் இளைஞர்கள் இலவசமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். இதற்காக நூலகங்களுக்கு முதல்கட்டமாக ரூ.2.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அடுத்த கல்வி ஆண்டு பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பாடத்திட்டத்தில் 12 திறன்மேம்பாடு பாடங்கள் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் பிளஸ்-2 படித்தால் அதற்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழக கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு பணி நடைபெற்று வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும்.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 82 ஆயிரம் பேர் பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுகிறது. வெயிட்டேஜ் முறை என்பது பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி அல்லது பட்டப்படிப்பு, பி.எட். படிப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண் ஆகும்.

வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும். 82 ஆயிரம் பேருக்கும் அவர்கள் எடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்