ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தீவிரம்: அக்டோபர் 24-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் முடிவு

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள ஆணையம் அக்டோபர் 24-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

Update: 2018-08-06 23:55 GMT
சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து பெங்களூரு சிறையில் இருந்து வரும் சசிகலா வக்கீல்கள் மூலம் தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ளார். சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள் என 75-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆணையம் இதுவரை விசாரணை நடத்தி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்ட போதும் நவம்பர் 22-ந் தேதி தான் ஆணையம் நேரடி விசாரணையை தொடங்கியது. ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய ஆரம்பத்தில் 3 மாதம் மட்டுமே தமிழக அரசு கால அவகாசம் வழங்கியது. அதன்பின்பு, ஒரு முறை 6 மாதமும், மற்றொரு முறை 4 மாதமும் கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த கால அவகாசம் அக்டோபர் 24-ந் தேதி முடிவடைகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் பெரும்பாலானோரிடம் விசாரணை முடிவடைந்து விட்டது. அப்பல்லோ மருத்துவர்கள் சிலரிடமும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டுபீலே, எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்டோரிடமும் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியது உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடித்து அக்டோபர் 24-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்பல்லோ மருத்துவமனையின் இரைப்பை மற்றும் உணவுக்குழாய் சிறப்பு மருத்துவர் பழனிசாமி நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

2016-ம் ஆண்டு செப்டம்பர் 25, 27, 29 ஆகிய தேதிகளில் ஜெயலலிதாவுக்கு வயிற்று கோளாறு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நான், அவருக்கு சிகிச்சை அளித்தேன். உரிய மருந்து, மாத்திரைகளுக்கு பின்பு வயிற்று கோளாறு சரியானது. இதன்பின்பு, அக்டோபர் 10-ந் தேதிக்கு பின்னர் ஒரு நாள் ஜெயலலிதாவுக்கு மீண்டும் வயிற்று கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் நான் அமெரிக்காவில் இருந்தேன். இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்து சம்பந்தமான விவரங்கள் இ-மெயில் மூலம் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த விவரங்களை பார்த்து உணவில் புரோட்டீன் அளவை குறைக்க ஆலோசனை தெரிவித்தேன்.

அதன்படி, புரோட்டீன் அளவு குறைக்கப்பட்டதும் வயிற்று கோளாறு சரியானது. அதன்பின்பு நான், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை. வயிற்றுக்கோளாறு பிரச்சினையை தவிர்க்க இனிப்பு மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்திருந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இனிப்பு மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரைத்த போதிலும் ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டுள்ளதே? என்று ஆணையத்தின் வக்கீல் மதுரை எஸ்.பார்த்தசாரதி மருத்துவர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மருத்துவர் பதில் அளித்துள்ளார்.

செவிலியர் அனுஷா நேற்று ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் நேற்று ஆஜராகவில்லை. அவர், வெளிநாடு சென்றிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மற்றொரு நாள் அவரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்