மெரினாவில் கருணாநிதிக்கு இடம்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். #Karunanidhi #RIP

Update: 2018-08-07 17:00 GMT
சென்னை,

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. மதியம் திமுக தலைவர்கள் முதல்-அமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

திமுக தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா சமாதிக்கு அருகே கருணாநிதிக்கு நினைவிடம் வைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். பார்ப்போம் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார், முழுமையான பதிலை அவர் இன்னும் தரவில்லை என்று கூறினார்.

இந்நிலையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் தர காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது குறித்த அவர் டுவிட்டர் பதிவில், ஜெயலலிதாவை போலவே, கருணாநிதியும் தமிழக மக்களின் குரலாக இருந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் இடம் தர வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன் என  ராகுல் காந்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்