அணையில் செல்பி எடுத்த வாலிபர் தவறி விழுந்து சாவு காப்பாற்ற முயன்ற என்ஜினீயரிங் மாணவரும் நீரில் மூழ்கி பலி

ஓசூர் அருகே அணையில் செல்பி எடுத்த வாலிபர் தவறி விழுந்து இறந்தார். காப்பாற்ற முயன்ற மாணவரும் நீரில் மூழ்கி பலியானார்.

Update: 2018-09-01 21:45 GMT
ஓசூர்,

கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் தேவேந்திரா (வயது 21). கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் தன்னுடன் வேலை செய்யும் நண்பர்கள் 2 பேருடன், கெலவரப்பள்ளி அணைக்கு சென்றார்.

அங்கு அணையில் இருந்து, தென்பெண்ணை ஆற்றில் மதகு வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் அருகே, தேவேந்திரா உள்பட 3 பேரும் தங்களின் செல்போன்கள் மூலமாக செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது தேவேந்திரா மற்றும் அவரது நண்பர் ஒருவரும், நிலைதடுமாறி நீரில் விழுந்தனர்.

அப்போது அந்த பகுதியில் நண்பருடன் நின்று கொண்டிருந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் காரைக்குடியைச் சேர்ந்த கேசவன் (22) அவர்களை காப்பாற்ற தண்ணீரில் இறங்கினார். இதில் ஒருவர் கரைக்கு வந்த நிலையில் தேவேந்திராவும், அவரை காப்பாற்ற சென்ற கேசவனும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற ஓசூர் அட்கோ போலீசார் நீரில் மூழ்கிய 2 பேரின் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்