சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்க விவரம்

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ள விவரங்களை தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.

Update: 2018-09-03 22:06 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தின் மொத்த வாக்காளரின் எண்ணிக்கை சுமார் 5.86 கோடியாக இருந்தது.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பணிகளை அடுத்து வரும் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

திருத்தப் பணிகளுக்கு முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 5.83 கோடியாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலுடன் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டால், இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 5 லட்சத்து 77 ஆயிரத்து 186 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது.

5 லட்சத்து 77 ஆயிரத்து 186 பெயர்களில், ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 439 இறந்தவர்களின் பெயர்கள்; 3 லட்சத்து 17 ஆயிரத்து 189 இடம் மாறிச் சென்றவர்களின் பெயர்கள்; 75 ஆயிரத்து 558 மீண்டும் பட்டியலில் இடம் பெற்றவர்களின் பெயர்கள் அடங்கும். இதற்கான அறிவிப்பை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று வெளியிட்டார்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும், எந்தெந்த காரணத்துக்காக எத்தனை பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

திருவள்ளூர் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து (கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது) மொத்தம் 53 ஆயிரத்து 815 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில், 13 ஆயிரத்து 875 இறந்தவர்களின் பெயர்கள்; 33 ஆயிரத்து 737 இடம் மாறிச்சென்றவர்களின் பெயர்கள்; 6,203 மீண்டும் இடம் பெற்ற பெயர்கள் அடங்கும்.

சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 16 ஆயிரத்து 954 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில், 2 ஆயிரத்து 3 இறந்தவர்களின் பெயர்கள்; 10 ஆயிரத்து 483 இடம் மாறிச்சென்றவர்களின் பெயர்கள்; 4,468 மீண்டும் இடம் பெற்ற பெயர்கள் அடங்கும்.

காஞ்சீபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 42 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில், 19 ஆயிரத்து 922 இறந்தவர்களின் பெயர்கள்; 66 ஆயிரத்து 749 இடம் மாறிச்சென்றவர்களின் பெயர்கள்; 18 ஆயிரத்து 371 மீண்டும் இடம் பெற்ற பெயர்கள் அடங்கும்.

தமிழகத்திலேயே அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட மாவட்டமாக காஞ்சீபுரம் மாவட்டம் திகழ்கிறது.

மேலும் செய்திகள்