மாநில செய்திகள்
தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் 30-ந்தேதி வரை செயல்படும் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து 30-ந்தேதி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நடப்பு காரீப் கொள்முதல் பருவம் 2017-2018-ம் ஆண்டில், 31.8.2018 வரை மட்டுமே நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, ரூ.115.67 கோடி மதிப்பிலான சிறப்பு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தியது.

அதன் பயனாக, டெல்டா மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து நெல் அறுவடை செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வரும் நிலையில், 1.9.2018 தேதிக்குப்பிறகும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு விவசாயிகளின் கோரிக்கைகளையும், நலனையும் கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது சம்பந்தமாக பிரதமர் மற்றும் மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம் விலாஸ் பாஸ்வானுக்கு கடிதம் அனுப்பினார்.

மேலும், மத்திய அரசு நல்ல முடிவை எடுக்க அறிவுறுத்தும் பொருட்டு, மத்திய மந்திரி ராம் விலாஸ் பாஸ்வானை டெல்லிக்கு சென்று நேரில் சந்தித்து, தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கையை அவரிடம் எடுத்துரைக்க, தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜையும், உணவுத்துறை செயலாளர் தயானந்த் கடாரியவையும் முதல்-அமைச்சர் பணித்தார்.

முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, 30.9.2018 வரை நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட கால நீட்டிப்பு செய்து ஆணைகள் பிறப்பித்தது. இதன் மூலம் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து 30.9.2018 வரை செயல்படும்.

தமிழ்நாடு விவசாயிகள், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் தங்களது நெல்லை விற்பனை செய்து பயன் பெறவேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.