சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.11½ லட்சம் தங்கம் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.11½ லட்சம் தங்கம் சிக்கியது

Update: 2018-09-13 21:25 GMT
ஆலந்தூர், 

குவைத் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த சவுந்தர் (வயது 35) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் அவர், சின்ன சின்னதாக வெட்டப்பட்ட 5 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 250 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஹைதர் (28) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர் அதில் அவர், உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 130 கிராம் எடைகொண்ட 2 சின்ன தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சவுந்தர், ஹைதர் ஆகிய 2 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 380 கிராம் தங்கத்தை கைப்பற்றி சுங்க இலாகா அதிகாரிகள், இந்த தங்கத்தை அவர்கள் யாருக்காக கடத்தி வந்தனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்