20 பவுன் நகை கொள்ளை வழக்கில் என்ஜினீயரிங் மாணவர்கள் 4 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்

ஆதம்பாக்கத்தில் நடந்த 20 பவுன் நகை கொள்ளை வழக்கில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-14 21:00 GMT
ஆலந்தூர், 

ஆதம்பாக்கத்தில் நடந்த 20 பவுன் நகை கொள்ளை வழக்கில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பாலாஜி நகரை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 60). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் ஆதம்பாக்கம் போலீசில் அளித்த புகாரில், பூட்டி இருந்த தன்னுடைய வீட்டில் 20 பவுன் நகைகள் கொள்ளை போனதாக தெரிவித்து இருந்தார்.

இது பற்றி பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கெங்கைராஜ், ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் வெங்கடாசலபதி ஒரு செல்போனில் அடிக்கடி பேசியது தெரியவந்தது.

உடனே அந்த எண்ணில் உள்ளவரின் வீட்டிற்கு போலீசார் சென்று விசாரித்தபோது திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. வெங்கடாசலபதியிடம் இருந்து நகைகளை பறித்து வந்ததாக கூறினார். இது தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் பரணிகுமார் (வயது 21), அஜய்குமார் (21), திவாகர் (21), மனோகர் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் போலீசாரிடம் மாணவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

முகநூலில் வெங்கடாசலபதியுடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது நாங்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருவதாகவும், வேலைக்கு முயற்சி செய்து வருவதாக தெரிவித்தோம். உடனே வெங்கடாசலபதி வேலைக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் எனக்கூறி எங்களை அவருடைய வீட்டுக்கு அழைத்தார்.

இதை நம்பி நாங்கள் சென்னையில் உள்ள வெங்கடாசலபதி வீட்டுக்கு வந்தோம். அங்கு அவர் எங்களிடம் வேலை பற்றி பேசாமல் தவறாக நடக்கும் வகையில் செயல்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரை தாக்கி 20 பவுன் தங்க நகைகளை பறித்தோம். மேலும் வங்கி ஏ.டி.எம். அழைத்து சென்று ரூ.7 ஆயிரம் எடுத்துக் கொண்டு சென்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து நகைகளை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்