ஊழலை ஒழிக்காமல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினால் பயன் இருக்காது டாக்டர் ராமதாஸ் அறிக்கை

தொழில் தொடங்க அனுமதி அளிப்பதில் நடைபெறும் ஊழலை ஒழிக்காமல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினால் பயன் இருக்காது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2018-09-15 19:31 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களாக திகழ்பவை எவை? என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன் டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி நிறுவனம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. மொத்தம் 30 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையில் தொழில் அனுமதி மற்றும் கட்டிட அனுமதி அளிப்பதில் தமிழகம் மிக மோசமாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் ஒடிசாவில் விண்ணப்பித்த ஒன்று முதல் மூன்று நாட்களில் தொழில் அனுமதி வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் அனுமதிகள் ஒற்றைச் சாளர முறையில் 30 நாட்களுக்குள் வழங்கப்படுவதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், நடைமுறை யதார்த்தம் அப்படிப்பட்டதாக இல்லை. தமிழகத்தில் தொழில் திட்டங்களுக்கான அனுமதி பெறுவது என்பது அதிக காலம் பிடிக்கும் ஒன்றாகவே உள்ளது. இதற்கான காரணம் வெளிப்படையானது. அது லஞ்சம் தான்.

இத்தகைய சூழலில் தான் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டாவது முறையாக வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்காமல் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படாது. 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு எவ்வாறு தோல்வியடைந்ததோ, அதேபோல் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடும் தோல்வியடைவது உறுதி.

எனவே, தொழில் தொடங்க அனுமதி அளிப்பதில் நடைபெறும் ஊழலை ஒழிக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். நேர்மையான அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் மூலம் தொழில் மற்றும் கட்டுமான அனுமதி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் தொழில் அனுமதி வழங்குவதற்காக வந்த விண்ணப்பங்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்